கொழும்பு தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதல் நடத்தியவரின் பரபரப்பு வாக்குமூலம்
கொழும்பு தெஹிவளையில் உள்ள வீடொன்றின் மீது கடந்த 11ஆம் திகதி கைக்குண்டு தாக்குதல் நடத்திய நபர் பொலிஸாரிடம் பல அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
நண்பனின் காதலியுடன் உல்லாசம் ; இறுதியில் பட்டதாரி இளைஞனுக்கு நடத்தப்பட்ட கொடூரம் ;வீடியோவால் வந்த வினை
இந்தக் கைக்குண்டு தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததுடன் அவர்களின் தந்தை படுகாயமடைந்தார்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்தவின் மேற்பார்வையில் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கின.

இவ்வாறான பின்னணியில் கைது செய்யப்பட்ட, கைக்குண்டு தாக்குதலை நடத்திய நபர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் 2025 ஆம் ஆண்டு நெதிமாலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி பிணையில் விடுதலையாகி வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
பின்னர் அவர் கடந்த ஓகஸ்ட் முதலாம் திகதி இரத்மலானையில் 'குடு அஞ்சு'வின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளார்.
அதற்காக போதியாவத்த அவிஷ்க மற்றும் 'கொஸ் மல்லி' ஆகியோர் தனக்கு 5 இலட்சம் ரூபாய் பணமும் 10 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் வழங்கியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தெஹிவளை வீட்டிற்கு கைக்குண்டு தாக்குதல் நடத்தும் ஒப்பந்தத்தையும் போதியாவத்த அவிஷ்க மற்றும் 'கொஸ் மல்லி' ஆகியோரே தன்னிடம் ஒப்படைத்ததாக அவர் கூறியுள்ளார்.
அதன்படி தாக்குதல் நடத்தச் சென்ற முச்சக்கர வண்டியில் கைக்குண்டு வைக்கப்பட்டிருந்ததாகவும், தாக்குதலுக்குரிய வீட்டைக் காட்டுவதற்காக அதில் மற்றொரு நபர் இருந்ததாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அந்த நபர் தனக்குக் காட்டியது தவறான வீடு என்றும் சந்தேகநபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
குறித்த தாக்குதலின் பின்னர் போதியாவத்த அவிஷ்க மற்றும் 'கொஸ் மல்லி' ஆகியோர் தனக்கு ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணத்தை வழங்கி, பிபிலை பகுதிக்கு தப்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
பிபிலையில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டில் மறைந்திருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், தாக்குதலுக்காக வீட்டைக் காட்டிய நபரும் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அதற்காக அவிஷ்க மற்றும் 'கொஸ் மல்லி' ஆகியோர் இருபதாயிரம் ரூபாய் பணம் வழங்கியமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகரவின் மேற்பார்வையில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.