ஒரே நாளில் இரண்டு தொழிலாளர்கள் பாம்புக்கடிக்கு இலக்கு
கண்டி – புசல்லாவை பெருந்தோட்டப் பகுதிகளில் இன்று இரண்டு தொழிலாளர்கள் பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளனர்.
கலுகல்ல தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 42 வயதுடைய தோட்டத் தொழிலாளர் ஒருவர் இன்று பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி
அவர் உடனடியாக வகுகப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அவர் கம்பளை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, சங்குவாரி மேல் பிரிவு தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த மற்றுமொரு ஆண் தொழிலாளரும் இன்று பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.
இந்தநிலையில், கடந்த வாரமும் கலுகல்ல தோட்டத்தில் பாம்புக்கடிக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்திருந்தார்.
தோட்டப் பகுதிகள் தற்போது காடாகக் காணப்படுவதாகவும், அவற்றை முறையாகப் பராமரிக்க தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால், தோட்டப் பகுதிகளை முறையாகப் பராமரித்து காடாக மாறுவதைத் தடுக்க வேண்டும் என்றும், தமது தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.