பாடசாலைக்குச் சென்ற சிறுமியைக் காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் மீது வழக்கு
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே உள்ள மயிலாடும்பாறை பகுதியில் 15 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இளைஞர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
மயிலாடும்பாறை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரே இச்சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞர் 15 வயது சிறுமியைக் காதலித்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் பாடசாலைக்குச் சென்ற சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவரைக் காரில் கடத்திச் சென்றுள்ளதாகப் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், தனது உறவினர் வீட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்ற அவர், அங்குள்ள அறையொன்றில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை மயிலாடும்பாறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், தினேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தலைமறைவாகியுள்ள சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.