விமான நிலையத்திற்கு தாமதமாக வந்த NPP எம்.பி ; பயணிக்க அனுமதிக்காத விமானப் பணிக்குழு
தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தாமதமாகச் சென்றதால், சீனா ஈஸ்டர்ன் விமான சேவையின் MU6018 விமானத்தில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சீனாவின் ஷாங்காய் நோக்கி புறப்படவிருந்த நிலையில், விமானம் புறப்படுவதற்குத் தயாராக இருந்த நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் விமான நிலையத்தை சென்றடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால், அவரை விமானத்தில் ஏற்றுவதற்கு விமானப் பணிக்குழுவினர் அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தாம் நாடாளுமன்ற உறுப்பினர் எனக் குறிப்பிட்டு விமானத்தில் பயணிக்க அனுமதிக்குமாறு அவர் கோரியதாகவும், எனினும் விமானப் பணிக்குழுவினர் அதற்கு இணங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, விமான அதிகாரிகளுக்கு உயர்மட்ட தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இருப்பினும் விமானம் திட்டமிட்ட நேரத்தில் ஷாங்காய் நோக்கி புறப்பட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.