பத்து ஆண்டுகளுக்கு பின் விவசாய கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பம்
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை முன்னெடுக்கப்படும் பொருளாதாரக் கணக்கெடுப்பின் கீழ், 2025/26 பொருளாதாரக் கணக்கெடுப்பின் விவசாய நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைப் சேகரிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
அதற்கமைய, இத்தகவல் சேகரிப்பு ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளது.
அனைத்து விவசாயத் தகவல்களையும் சேகரிக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்கீழ் விவசாயப் பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு மற்றும் பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்தப்படும் நிலங்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படும்.
இதன்போது, முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் விவசாயத் துறையின் கட்டமைப்புத் தொடர்பில் மிகச்சிறிய நிர்வாகப் பிரிவான கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டம் வரை தகவல்களைச் சேகரித்தல், செயலாக்குதல் மற்றும் விநியோகித்தல் என்பன இடம்பெறும். ஒரு பயிர்ச்செய்கை ஆண்டிற்கான உரிய விவசாயத் தகவல்களே இதற்காகப் அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றன.
தேசிய மற்றும் பிரதேச மட்டத்தில் விவசாயத் துறை சார்ந்த அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுப்பதற்குத் தேவையான துல்லியமான தகவல்களைப் பெற்றுக்கொள்ளல், கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் உள்ளூராட்சிப் பிரிவு மட்டத்தில் தரவுப் பயனாளர்களின் தேவைக்கேற்பத் தகவல்களை வழங்குதல் மற்றும் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பைக் கண்டறிந்து பொருளாதாரச் சுட்டிகளை மேம்படுத்த முடிவதன் மூலம் குறித்த சுட்டிகளின் துல்லியத்தன்மையை அதிகரிக்க முடிதல் என்பன இக்கணிப்பை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
கணக்கெடுப்புத் தகவல்களின் இரகசியத்தன்மையை முழுமையாகப் பாதுகாப்பதற்குத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கட்டுப்பட்டுள்ளதுடன், கணக்கெடுப்பின் போது பெறப்படும் எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வெளிப்படுத்த முடியாது.
அத்துடன், கணக்கெடுப்பு அட்டவணைகளிலுள்ள தகவல்களை நீதிமன்றத்தில் சான்றாகச் சமர்ப்பிக்கவும் முடியாது. தகவல்களைச் சேகரிக்கும் உத்தியோகத்தர்கள் அனைத்துக் வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் சென்று, விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் அலகுகளை இனங்கண்டு, விவசாயக் குழுக்களுடன் நேர்காணல்களை நடத்துவதன் மூலம் தகவல்களைச் சேகரிக்கும் பணியை மேற்கொள்வர் என தெரிவிக்கப்படுகின்றது.