VAT வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி அதிரடி திட்டம்
மக்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்கும் வகையில், எதிர்வரும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் பெறுமதி சேர் வரி (VAT) விகிதத்தைக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (08) அலரி மாளிகையில் நடைபெற்ற 1,540 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் அரச செலவினங்களை முறையாக நிர்வகித்து, மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரிச்சுமையைத் தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
[J4AENT ]
“எதிர்வரும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் பெறுமதி சேர் வரியைக் (VAT) குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே எமது நோக்கம்” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், அத்தியாவசிய கல்வி உபகரணங்கள் மற்றும் புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
ஒரு குழந்தை கல்விக்காக புத்தகமொன்றை வாங்கும்போது அதற்கான வரிச்சுமையைச் சுமக்க வேண்டிய நிலை இருக்கக்கூடாது என்றும், அவ்வாறான வரிகளை நீக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அரச ஊழியர்களின் வேதன அதிகரிப்புகளை நடைமுறைப்படுத்தும் அதேவேளை, வரிகளைக் குறைப்பதற்கும் அரச செலவினங்களை மிகவும் கவனமாக நிர்வகிக்க வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அரச துறையின் அடிப்படை வேதனத்தை மூன்று கட்டங்களாக அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் காரணமாக, 2027ஆம் ஆண்டளவில் அரசாங்கத்திற்கு மேலதிகமாக 330 பில்லியன் ரூபாய் செலவாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.