6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
இந்தியா விழுப்புரம் மாவட்டத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட 65 வயதான கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
20 ஆண்டுகள் சிறை
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா அச்சரம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்வம் (65) என்பவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் திகதி, அச்சரம்பட்டு பகுதியில் முதலாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு சென்ற செல்வம், சிறுமியிடம் சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தின் பின்புறம் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
சம்பவத்துக்குப் பின்னர் சிறுமி அழுதுகொண்டே வீட்டுக்குச் சென்று பெற்றோரிடம் நடந்தவற்றைத் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், வானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் பொலிஸார் செல்வத்துக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, குற்றம் சாட்டப்பட்ட செல்வத்துக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 4 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.4 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.