தமிழர் பகுதியில் திமிங்கில வாந்தியுடன் இருவர் கைது
மன்னார் சௌத் பார் கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, தடை செய்யப்பட்ட ஆம்பர் கிரீஸ் (Ambergris) தொகையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாவர மற்றும் விலங்கின பாதுகாப்புச் சட்டத்தின் பிரகாரம் வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்காகக் கொண்டு வரப்பட்ட, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான 67 கிலோ எடையுடைய திமிங்கலத்தின் எச்சமான ஆம்பர் கிரீஸ் கைப்பற்றப்பட்ட நிலையிலேயே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமத்திய கடற்படை கட்டளையின் 'இலங்கை கடற்படை கப்பல் கஜபா' பிரிவினரால் மன்னார் சௌத் பார் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாகச் சேகரிக்கப்பட்டுக் கடத்தப்படவிருந்த 67 கிலோகிராமுக்கும் அதிகமான திமிங்கலத்தின் ஆம்பர் கிரீஸ் தொகையுடன் இரு சந்தேக நபர்கள் கடற்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 36 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட ஆம்பர் கிரீஸ் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.