யார் செவ்வந்தியை நேசித்தாலும், இது தான் நடக்கும் ; அரசாங்க தரப்பில் வெளியான தகவல்
செவ்வந்தி' தொடர்பான விசாரணைகள் மற்றும் நாட்டில் போதைப்பொருள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் குறித்து எந்தவிதமான அரசியல் தலையீடும் இன்றிச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரிய ஆரச்சி தெரிவித்துள்ளார்.
"யார் செவ்வந்தியை நேசித்தாலும் (ஆதரவு அளித்தாலும்)", போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட எவருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சலுகை கிடையாது.
குற்றச் செயல்கள்
போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை முற்றாக முடிவுக்குக் கொண்டு வர அரசாங்கம் ஒரு பெரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் கடந்த 17 ஆம் திகதியன்று ஜனாதிபதி செயலகத்தில் இது தொடர்பான தேசியக் குழு கூடி ஆலோசனை நடத்தியது.
இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் அரசியல் ஆதரவு இன்றி இலங்கையில் தொடர முடியாது என்பது மிகவும் தெளிவாகியுள்ளது. இதுவரை இத்தகைய குற்றச் செயல்கள் அரசியல் ஆதரவு, ஆசீர்வாதம் மற்றும் பாதுகாப்புடன் நடந்தன.
ஆனால், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ், குற்றங்களுக்கோ அல்லது போதைப்பொருட்களுக்கோ எந்தவிதமான அரசியல் பாதுகாப்பும், ஆசீர்வாதமும், காவலும் கிடைக்காது எனவும் சந்தன சூரிய ஆரச்சி தெரிவித்துள்ளார்.