சூடுபிடிக்கும் யாழ் இளைஞன் துப்பாக்கிச் சூடு விவகாரம் ; சீறும் தமிழ் எம். பிக்கள்
குற்றத்துடன் தொடர்புடையவர்களே அந்த குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நிலைமை தான் இந்த நாட்டில் காணப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

நீதியான விசாரணைகள்
மேலும் தெரிவிக்கையில், போரற்ற சூழலில், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி வீதிகளில் சுதந்திரமாக நடமாட கூடிய சூழலில் வாகனத்தை நிறுத்தாமல் சென்றவர்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு அதனை நியாயப்படுத்த முடியாது.
வாகனம் ஒன்றை நிறுத்துமாறு கட்டளையிட்டு , அவர்கள் கட்டளையை மீறி சென்றால் , வாகனத்தை நிறுத்த வைப்பதற்கான நடவடிக்கையை தான் பொலிஸார் மேற்கொள்ள முடியுமே தவிர சாரதியை சுட்டு கொல்ல முடியாது.
ஒரு குற்றவாளியாக இருந்தாலும் , பொலிஸார் சுட்டு கொள்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதியான விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும்என மேலும் தெரிவித்தார்.
துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
பொலிஸாரோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது பிரதேச சபை உறுப்பினர்களோ யார் பிழை செய்தாலும், யார் பிழை செய்தது என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றம். எனவே நீதிமன்றம் சரியான நடவடிக்கை எடுக்கும் என்றார்