இரு நாட்களாக அரங்கேறிய போதை விருந்து ; சுற்றிவளைப்பில் 30 பேர் கைது
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நுவரெலியா கிரகறி வாவி கரையோரத்தில் நான்காவது வாகனத் தரிப்பிடத்தில் இடம்பெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்றில் போதைப்பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட தேடுதல் நடவடிக்கையின்போது இச்சம்பவம் நேற்று (18) ஆரம்பிக்கப்பட்டு இன்று (19) அதிகாலை வரையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
இரகசிய தகவல்
போதைப்பொருட்களுடன் பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்று இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட குஷ் போதை பொருள், கஞ்சா, ஐஸ், சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகள், போதைப்பொருள் மாத்திரைகள் மற்றும் மாவா உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்களைக் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கம்பஹா, மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டிய, மரதானை, கிராண்ட்பாஸ், பெலியகொட மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களை சேர்ந்த 18 முதல் 35 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டடு மேலதிக விசாரணையின் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.