யாழ்–கொழும்பு பயணிகளே அவதானம் ; திருமுறிகண்டியில் பெண் தொடர்பில் எச்சரிக்கை
யாழ்ப்பாணம் – கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் பொதுமக்கள், திருமுறிகண்டி பகுதியில் பிச்சை கேட்கும் பெண் ஒருவர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சுமார் 60 வயது மதிக்கத்தக்க குறித்த பெண், வெளிநாடுகளில் இருந்து விடுமுறைக்காக ஊருக்கு வருபவர்களை அவர்களது உடை மற்றும் நடைமுறைகளை அவதானித்து அடையாளம் கண்டு, அவர்களிடம் பரிதாபமாகப் பேசி அதிகளவான பணத்தைப் பெற்றுக்கொள்வதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சாதாரணமாக சிறிய தொகைகளைப் பெறுவதற்கு பதிலாக, தாம் வறுமையில் இருப்பதாகவும், குறிப்பிட்ட தொகை கிடைத்தால் கோழி வளர்ப்பு உள்ளிட்ட வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்து ஆயிரக்கணக்கான ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொள்வதாக அந்தத் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பெண் பிச்சை எடுப்பதுடன் மட்டுப்படாமல், வட்டி அடிப்படையில் பணம் வழங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாகவும், அவருடன் சிலர் இணைந்து செயற்படுவதாகவும் சமூக வலைத்தளப் பதிவுகளில் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எனினும், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், திருமுறிகண்டி பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள், குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து விடுமுறைக்காக வருபவர்கள், பணம் வழங்கும் விடயத்தில் அவதானமாக இருக்குமாறு சமூக வலைத்தளங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.