மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் யாழ்ப்பாண அபிவிருத்திக்கு தடை
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில அபிவிருத்தித் திட்டங்களை மீள்மதிப்பீடு செய்து முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
அக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டை விட இவ்வாண்டு இருமடங்கு நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.
எனினும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில அபிவிருத்தித் திட்டங்களை மீள்மதிப்பீடு செய்து முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, வீதி அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதிலும் சிக்கல்கள் காணப்படுகிறது.
இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் திட்டமிடப்பட்ட அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது, சில திட்டங்கள் அடுத்த ஆண்டிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதனால், அனைத்து திணைக்களங்களும் ஒன்றிணைந்து, மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் திட்டங்களைச் செயற்படுத்தி நிறைவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.