ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது விபரீதம் ; நொடிப்பொழுதில் உயிா்காத்த பெண் காவலர்
இந்தியாவின் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள காசிகுடா ரயில் நிலையத்தில், நகர்ந்து கொண்டிருந்த ரயிலில் தனது மகளுடன் ஏற முயன்ற தந்தை ஒருவரும் அவரது குழந்தையும் விபத்தில் சிக்கவிருந்த நிலையில், ரயில்வே பாதுகாப்புப் படையின் பெண் காவலர் ஒருவர் துரிதமாகச் செயல்பட்டு இருவரையும் காப்பாற்றியுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி மாலை, குறித்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் விசாகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிப்பதற்காக ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
இதன்போது, ரயில் மெதுவாகப் புறப்படத் தொடங்கிய நிலையில், தனது மகளைக் கையில் பிடித்தவாறு ரயிலில் ஏற முயன்ற தந்தை எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி, ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் விழும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்.

இதனை உடனடியாக அவதானித்த ரயில்வே பாதுகாப்புப் படையின் (RPF) பெண் காவலர் ரீனா குமாரி, எவ்வித தாமதமுமின்றி விரைந்து செயற்பட்டு தந்தையையும் குழந்தையையும் பின்னோக்கி இழுத்து பாதுகாப்பாகக் காப்பாற்றியுள்ளார்.
அதேவேளை, நடைமேடையில் ஏற்பட்ட பரபரப்பான சூழலை உணர்ந்த ரயில் சாரதி, அவசரகாலப் பிரேக்கைப் பயன்படுத்தி ரயிலை நிறுத்தியுள்ளார்.
இதனால், ஏற்படவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த குடும்பத்தினர் பாதுகாப்பாகத் தங்களது பயணத்தைத் தொடர்ந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
ஆபத்தான தருணத்தில் விரைந்து செயற்பட்டு இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய பெண் காவலர் ரீனா குமாரியின் துணிச்சலான நடவடிக்கையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதேவேளை, ரயில் முழுமையாக நிற்பதற்கு முன்னர் அதில் ஏறவோ அல்லது இறங்கவோ முயற்சிப்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எனவே, பயணிகள் ரயில்வே பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.