படுகொலைக்குத் தயாரான கூலிப்படையினர் ஆயுதங்களுடன் கைது
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அசேல என்பவரின் பிள்ளைகளில் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிதாரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகிய இருவரைப் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், தற்போது வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘பழனி கெனிஸ்டர்’ என்பவரின் குழுவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விசேட அதிரடிப் படையின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, சந்தேகநபர்களிடமிருந்து ஷொட்கன் வகைத் துப்பாக்கி ஒன்று, 12 போரா ரகத் தோட்டாக்கள் ஐந்து, 22 கிராம் 340 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், கைப்பேசி ஒன்று மற்றும் பயணப் பையொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளின்போது, 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அசேல என்பவர் ‘பழனி கெனிஸ்டர்’ குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகச் சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது
குறித்த குற்றக் குழுவில் இணையுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அசேல நிராகரித்தமையே அவரது கொலைக்குக் காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, கொல்லப்பட்ட அசேலவின் இரண்டு பிள்ளைகளில் ஒருவரைச் சுட்டுக் கொலை செய்வதற்காகக் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரியையும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரையும் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரும் கொட்டாஞ்சேனைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காகக் கொட்டாஞ்சேனைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.