பசில் ராஜபக்ஷவுக்கு எதிராகப் பிடியாணை ; சர்வதேச சிவப்பு அறிவித்தலைப் பெற நீதிமன்றம் உத்தரவு
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் நிதி முறைகேடு தொடர்பான விவகாரத்தில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (14) உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், சர்வதேச காவல்துறையின் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்காக, சிவப்பு அறிவித்தலைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பிடியாணையைப் பிறப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த விவகாரம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் ஒதுக்கப்பட்ட 7.8 மில்லியன் ரூபாய் நிதியை, அதன் ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தாமல், ஊவா மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு 12,000 டி-சேர்ட்டுகளை வழங்குவதற்குப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்துக்கு நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் ஏற்கனவே நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.