இலங்கையில் கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண்களுக்கு வைத்தியர் தேஷானியின் முக்கிய தகவல்
கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும், 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஏற்றப்படாது என சுகாதார அமைச்சின், சுகாதார மேம்பாட்டு மையத்தின் ஊடகப்பிரிவு அதிகாரியான வைத்தியர் தேஷானி ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், “18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படாது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் பின்னர் அப்பிரிவினருக்கும் அனுமதி வழங்கப்படலாம் என தெரிவித்திருக்கின்றார்.
அத்துடன், கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படாது. அதேபோல பாலுட்டும் தாயாக இருந்தால் குழந்தை பிறந்து 6 மாதங்கள்வரை தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியாது எனவும், ஏனெனில் இப்பிரிவினர் குறித்தும் இன்னும் ஆய்வு இடம்பெறவில்லை.
6 மாதங்களுக்கு பிறகே தடுப்பூசியை பெறுவதற்கு தகுதிபெறுவர் எனவும் தெரிவித்தார், அதிகளவு ஒவ்வாமை இருப்பவர்கள் தவிர்த்துக்கொள்வதே நல்லது எனவும் குறிப்பிடப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி 2 கட்டங்களாக ஏற்றப்படும். எனவே, முதற்சுற்றில் தடுப்பூசி ஏற்றப்பட்டு, அதனால் அதிகளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அவர் இரண்டாவது டோஸை பெற்றுக்கொள்வதை தவிர்க்க வேண்டும், கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சை நிலையங்களில் இருப்பவர்கள் தடுப்பூசியை பெறமுடியாது. குணமடைந்து இரு வாரங்களின் பின்னரான கலப்பகுதியிலேயே பெற்றுக்கொள்ளலாம்.
நானும் தடுப்பூசி ஏற்றிக்கொண்டேன். நலமாக இருக்கின்றேன். கொரோனா தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு சிற்சில உபாதைகள் ஏற்படக்கூடும். ஊசி ஏற்றப்படும் இடம் சிவப்பு நிறமாகலாம், அந்த இடத்தில் வலி ஏற்படலாம்.
சிலவேளை சிறு அளவில் காய்ச்சல் ஏற்படக்கூடும். நடுக்கல் ஏற்படலாம், மேலும் சிலருக்கு உணவு அருந்த முடியாது, வாந்தியும் வரக்கூடும். ஆனால், இரு நாட்களில் இயல்புநிலைக்கு வந்துவிடும். எனினும், கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொள்வதற்கு அச்சப்படத்தேவையில்லை. நீங்கள் விரும்பினால் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம்..
அத்துடன், தடுப்பூசியை பெற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்ற கருத்தும் சிலர் மத்தியில் நிலவுகின்றது.
குறிப்பாக தடுப்பூசியை பெற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் கர்ப்பம்தரிக்க முடியாது என சில பெண்கள் கருதுகிறர், கர்ப்பமடைந்தாலும் கரு கலைந்துவிடலாம் என சிலர் கருதுகின்றனர். அவ்வாறு எதுவும் இல்லை.
எனவே, சுகாதார தரப்பினரிடம் ஆலோசனை பெற்று, வைத்தியரிடம் உங்கள் பிரச்சினைகளை எடுத்துரைத்த பின்னர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள்.
எவராவது கர்ப்பம் தரிக்க விரும்பினால் 3 மாதங்களுக்கு முன்னர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது சிறந்தது.” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.