கிளிநொச்சியில் வன்முறை கும்பல் வெறியாட்டம்; அச்சத்தில் உறைந்த வீட்டினர்
கிளிநொச்சி பளை சோறன்பற்று பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று(13) இரவு இனம் தெரியாத நபர்கள் உள்நுழைந்து உடைமைகளை சேதமாக்கி தீயிட்ட சம்பவத்தால் வீட்டினர் அச்சத்தில் உள்ளனர்.
முகத்தை மூடி மறைத்து கத்தி, வாள்கள், பெற்றோல் குண்டுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நான்கு நபர்கள் வீட்டிற்குள் தாக்குதலை மேற்கொண்டதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
நான்கு நபர்களில் ஒருவர் வீட்டின் வாசல் கதவுடன் நிறுத்தப்பட்டதுடன் ஏனைய மூவர்களும் கத்தி, வாள்களுடன் வீட்டுக்குள் நுழைந்து உடைமைகளை சேதமாக்கி தீயிட்டுள்ளனர்.
இதில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், கதவுகள், கண்ணாடிகள், குளிர்சாதனப்பெட்டி, அலுமாரிகள், ஏனைய பெறுமதியான ஆவணங்களுடன் பெறுமதியான வீட்டு உபகரணங்களும் அடித்து நொருக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்தவர்கள் கூக்குரலிடத் தொடங்கியதும் தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் பெற்றோல் போத்தலையும் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கிய நிலையில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.