உலகக் கிண்ணக் களத்தில் இந்தியா–பாகிஸ்தான் ; ரசிகர் வருகையை முன்னிட்டு கடும் கண்காணிப்பு
கொழும்பில் இன்று நடைபெறவுள்ள இந்திய - பாகிஸ்தான் இடையிலான டி20உலகக்கிண்ணப் போட்டிக்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு பேரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்த விசேட பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன்படி, கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2,800 பொலிஸ் அதிகாரிகள், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு (CCD) மற்றும் அரச புலனாய்வுச் சேவை (SIS) அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் ஆர் பிரேமதாச விளையாட்டரங்கைச் சுற்றி இன்று (16) பிற்பகல் 3 மணி முதல் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
மைதானத்தின் முழுமையான பாதுகாப்பு மற்றும் வீரர்கள், இராஜதந்திரிகளின் பாதுகாப்பிற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை பொறுப்பேற்றுள்ளது.
மேலும் 750 இராணுவத்தினரும், கொமாண்டோ படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். வான்படையின் ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அனுமதியற்ற ட்ரோன்களைத் தடுக்க ஜாமர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இணையவழி தாக்குதல்களைத் தடுக்க சைபர் குற்றத்தடுப்புப் பிரிவின் விசேட குழுவும் களமிறக்கப்பட்டுள்ளது.
மைதானத்தைச் சுற்றி வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை. ரசிகர்கள் மைதானத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள ஒதுக்கப்பட்ட வாகன தரிப்பிடங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டும்.
வாகன தரிப்பிடங்களிலிருந்து மைதானத்திற்கு ரசிகர்களை அழைத்து வர விசேட ஷட்டில் பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை உலகக் கிண்ணப் போட்டிக்குரிய டிக்கெட்டுக்களைப் பெற்றவர்கள் மாத்திரம் மைதான வளாகத்திற்குள் வருமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
டிக்கெட் கிடைக்காதவர்கள் மைதானத்தைச் சுற்றித் திரிவை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், போட்டி முடிந்து கடைசி ரசிகர் வெளியேறும் வரை இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.