ஜனநாயகன் மேடையில் சூசகமாக அரசியல் பேசிய விஜய்
மலேசியாவில் நடைபெற்ற நடிகர் விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அவரது அரசியல் எதிர்காலம் மற்றும் தேர்தல் கூட்டணி தொடர்பான கருத்துகள் குறித்து விஜய் மறைமுகமாக பேசியுள்ளார்.
நிகழ்வில் உரையாற்றிய விஜய், கடந்த 33 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் தான் எதிர்கொண்ட விமர்சனங்கள், அவமானங்கள் மற்றும் சவால்களை நினைவுகூர்ந்தார்.
பல காயங்களை கடந்து தான் இந்த நிலைக்கு வந்ததாகக் கூறிய அவர், தன்னை ஆதரித்து எப்போதும் திரையரங்குகளில் நின்று ஆதரவு வழங்கும் ரசிகர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார். “எனக்கு ஒன்று என்றால் ரசிகர்கள் தியேட்டரில் வந்து நிற்கிறார்கள்.

நாளை அவர்களுக்கு ஒன்று என்றால், நான் அவர்கள் வீட்டில் போய் நிற்க விரும்புகிறேன். எனக்காக அனைத்தையும் விட்டுக் கொடுக்கும் ரசிகர்களுக்காக, நான் சினிமாவையே விட்டுக் கொடுக்கிறேன்.
நான் வெறும் நன்றி சொல்லிவிட்டு போகும் மனிதன் அல்ல; நன்றிக்கடனைத் தீர்த்துவிட்டுச் செல்பவன்,” என விஜய் தெரிவித்தார்.
அத்துடன், அரசியல் சூழலை சுட்டிக்காட்டிய அவர், வெற்றிக்கு வலுவான எதிரிகள் அவசியம் என்றும், அத்தகைய எதிரிகளை எதிர்கொள்ளும் போது தான் தங்களின் வலிமை நிரூபிக்கப்படும் என்றும் கூறினார்.
சமீப காலமாக விஜய் தனியாக அரசியல் களத்தில் இறங்குவாரா அல்லது கூட்டணியாக வருவாரா என்ற விவாதங்கள் இடம்பெறுவதை குறிப்பிட்ட அவர், “நாம் எப்போது தனியாக இருந்திருக்கிறோம்?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், “செய்வதைத்தான் சொல்ல வேண்டும். 2026 ஆம் ஆண்டு வரலாறு திரும்புகிறது. அதனை ஏற்றுக்கொள்ள நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்,” என விஜய் தெரிவித்தார்.
இந்த உரை, அவரது அரசியல் நகர்வுகள் மற்றும் எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் பல்வேறு ஊகங்களையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.