கண்டி - கொழும்பு பிரதான வீதி குறித்து வெளியான முக்கிய தகவல்
சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு அபாயத்தைத் தொடர்ந்து, தற்காலிக பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவை பகுதி மீண்டும் போக்குவரத்துக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) அதிகாரிகள் நேற்று (27) மேற்கொண்ட கூட்டு ஆய்வைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மண்சரிவு அபாயம் இன்னும் முழுமையாக நீங்காததால், பலத்த மழை பெய்யும் நேரங்களில் சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் ஆலோசனைகளைத் துல்லியமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அதன் பணிப்பாளர் நாயகம் ஆசிறி கருணாவர்தன எச்சரித்துள்ளார்.
அத்துடன் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை அடையாளம் காண ட்ரோன் (Drone) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், விரிவான நில அளவைப்பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் மண்சரிவு பாதிப்புகளைக் குறைப்பதற்காகப் பலவீனமான பாறைகளை அகற்றுதல், பாறைகளின் மேல் தங்கியுள்ள மண் அடுக்குகளைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல், பலவீனமான பகுதிகளில் பாதுகாப்புத் தடுப்புச் சுவர்களை நிர்மாணித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.