லீசிங் தவணை செலுத்த முடியாதோரின் வாகனங்கள் பறிமுதல் ; சஜித் குற்றச்சாட்டு
12 இலட்சம் ரூபாய்க்கு விட்ஸ் ரக சிற்றுந்தை வாங்க நினைத்த மக்கள், தற்போது லீசிங் தவணைகளை செலுத்த முடியாத நிலையில், மீட்பு முகவர்களால் வாகனங்களை பலவந்தமாக பறிமுதல் செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
லீசிங் அல்லது கடன் தவணைகளை செலுத்தத் தவறும் போது, சட்டரீதியான நடைமுறைகள் ஊடாக கடனை அறவிட முடியும் எனவும், ஆனால் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் பலவந்தமாக வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் மீண்டும் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லீசிங் மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே சஜித் பிரேமதாச இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
2000 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க குத்தகை மற்றும் நிதியியல் சட்டத்தின் கீழ் கடனை அறவிடுவதற்கான சட்டரீதியான வழிமுறைகள் காணப்படுவதாகவும், அவற்றை மீறி சொத்துக்களை பலவந்தமாக பறிமுதல் செய்வது சட்டவிரோதமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடன் தவணைகளை செலுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டால், கடன் மறுசீரமைப்புக்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், சட்டவிரோதமான முறையில் வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இவ்வாறான மீட்பு முகவர் முறையை நாட்டிலிருந்து ஒழித்து, கடன்களை முறையான சட்ட நடைமுறைகளின் ஊடாக அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.