கள்ளக்காதலுக்கு இடையூறு ; பெற்ற குழந்தைகளை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தாய்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை அருகே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாகக் கருதி தனது 5 வயது மகள் மற்றும் 3 வயது மகனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், குழந்தைகளின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேனோன்பாறை கூராங்காடு பகுதியைச் சேர்ந்த ஜான் குமார் (36) என்பவரின் மனைவி நிவேத்யா (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பகட்ட விசாரணை
இவர்களுக்கு ஜெனிபர் ஜூலியட் (5) என்ற மகளும், ராபின் கிறிஸ்டோபர் (3) என்ற மகனும் இருந்தனர்.

சம்பவத்தன்று ஜான் குமார் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், குழந்தைகள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இருவரும் வீட்டின் குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கிய நிலையில் காணப்பட்டனர். இதையடுத்து, குழந்தைகள் தவறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துவிட்டதாக நிவேத்யா கூறி சத்தமிட்டுள்ளார்.
அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இரு குழந்தைகளையும் மீட்டு தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணையில், குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என கொழிஞ்சாம்பாறை பொலிஸார் சந்தேகித்தனர்.
இரு குழந்தைகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கள்ளக்காதல்
எனினும், நிவேத்யாவிடம் மேற்கொண்ட விசாரணையின்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், அவருக்கு வேறொருவருடன் ஏற்பட்ட தொடர்பு பின்னர் கள்ளக்காதலாக மாறியதாகவும், அந்த உறவுக்கு குழந்தைகள் இடையூறாக இருப்பதாகக் கருதி அவர்களை கொலை செய்ய நிவேத்யா திட்டமிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதன்படி, சம்பவத்தன்று குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த பின்னர், அவர்கள் தவறி விழுந்து உயிரிழந்ததாக நிவேத்யா நாடகமாடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து நிவேத்யாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நபருக்கு கொலையில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.