ஈஸ்டர் தாக்குதல் விசாரணை ; கோட்டாபயவின் எழுத்தாணை மனு நிராகரிப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த எழுத்தாணை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்து தடுத்து வைப்பதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி கோட்டாபய ராஜபக்ச இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய இரு நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த மனு தொடர்பான வாய்மூல சமர்ப்பனங்கள் நிறைவடைந்த நிலையில், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா அல்லது ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்வதா? என்பது தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவிருந்தது.
அதற்கமைய குறித்த மனு இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போது அதனை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.