யாழில் 4 சந்தேகநபர்கள் கைது ; விசேட தேடுதலில் வெளிவந்த சட்ட விரோத செயல்
யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடல் மற்றும் கடற்கரைப் பகுதிகளை உள்ளடக்கிய பகுதியில் இலங்கை கடற்படையினரால் நேற்று (11) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 3 டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வடக்கு கடற்படை கட்டளையின் படகுகள் மற்றும் வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் அதிகாரிகளால் இச் சோதனை நடவடிக்கை கூட்டு முயற்சியாக முன்னெடுக்கப்பட்டது.

மீன் தொகுதி பறிமுதல்
தடைசெய்யப்பட்ட ஒளி விளக்குகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டபோதே இவர்கள் சட்டத்தின் கைகளில் சிக்கியுள்ளனர்.
3 டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 1,900 கிலோகிராமிற்கும் அதிகமான மீன் தொகுதி என்பன கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும் புத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளி மற்றும் பள்ளிவாசல்பாடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், டிங்கி படகுகள் மற்றும் கைப்பற்றப்பட்ட மீன் தொகுதி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.