அதானியைப் பின் தள்ளி ஆசிய செல்வந்தர் பட்டியலில் டிக்டொக் நிறுவுனர் முதலிடம்
டிக்டொக் (TikTok) செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸின் (ByteDance) நிறுவுனர் ஸாங் யிமிங் (Zhang Yiming), இந்திய செல்வந்தரான கௌதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் முதன்மை செல்வந்தராக உருவெடுத்துள்ளார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் சுட்டெண்ணின் (Bloomberg Billionaires Index) படி, சீனாவின் ஸாங் யிமிங்கின் சொத்து மதிப்பு 105 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதைத் தொடர்ந்து அவர் இந்த முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மார்ச் 2019 இல் ப்ளூம்பெர்க் இவரது சொத்துக்களைக் கணக்கிடத் தொடங்கிய போது 13 பில்லியன் டொலர்களாக இருந்த இவரது சொத்து மதிப்பு, தற்போது 8 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
பைட்டான்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு அதிகரித்தமை மற்றும் அந்த நிறுவனம் உருவாக்கியுள்ள 'டூபாவ்' (Doubao) சொட்பொட், 'சீடான்ஸ்' (Seedance) காணொளி உருவாக்கும் தொழில்நுட்பம் உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு (AI) தயாரிப்புகளுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் கிடைத்த பெரும் வரவேற்புமே இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.
அமெரிக்காவில் டிக்டொக் செயலி தீவிர சோதனைகளையும் கட்டுப்பாடுகளையும் எதிர்கொண்ட போதிலும், ஸாங் யிமிங் செயற்கை நுண்ணறிவுத் துறையிலான தனது முதலீடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வந்தார்.
மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் டிக்டொக்கின் அமெரிக்க செயல்பாடுகளின் சில பகுதிகளை அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு பைட்டான்ஸ் மாற்றியமைத்ததைத் தொடர்ந்து, அந்தச் செயலியின் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலையும் தணிந்தது.
முன்னதாகச் சீனாவில் முதன்மை செல்வந்தராக திகழ்ந்த ஸாங் யிமிங், தற்போது ஆசியாவின் முன்னணி செல்வந்தராக மாறியுள்ளதுடன், ஆசிய செல்வந்தர்களின் சொத்து மதிப்பிலும் தரவரிசையிலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் நுகர்வோர் தொழில்நுட்பத் தளங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை இந்த மாற்றம் வெளிப்படுத்தியுள்ளது.