டுபாயிலிருந்து நாடு திரும்பிய சில வாரங்களில் கொலை ; ‘பூத கழுவா’ வழக்கில் அதிர்ச்சி தகவல்கள்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘கொஸ்மல்லி’ என்பவரின் நெருங்கிய உறவினரான தமித் பிரசாத் பொன்சேகா என்ற ‘பூத கழுவா’ வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிசை குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளைத் தொடர்ந்து இக்கைதுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 21 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருள், நான்கு வாள்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் மற்றும் நான்கு கைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 7ஆம் திகதி அதிகாலை சுமார் 1.45 மணியளவில் முகங்களை மூடிய நால்வர் அடங்கிய கும்பல் ஒன்று முச்சக்கரவண்டியில் வந்து, ‘பூத கழுவா’ தங்கியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளது.
அவர் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த பின்னர் குறித்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட தமித் பிரசாத் பொன்சேகா, தெஹிவளை ஓபன் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ‘கொஸ்மல்லி’ என்பவருடன் டுபாயில் சில வருடங்கள் தங்கியிருந்ததுடன், அங்கு பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட பின்னர் சில வாரங்களுக்கு முன்னரே இலங்கைக்குத் திரும்பியிருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரின் புகைப்படம் CCTV காட்சிகளின் ஊடாக பெறப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றப் பதிவு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
மேலதிக விசாரணை
குறித்த புகைப்படம் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அங்குலானைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் சுமார் 65 சதவீதம் ஒத்துப்போவதாக குற்றப் பதிவு பிரிவினரால் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கொலைச் சம்பவத்திற்காக தன்னுடன் மேலும் நால்வர் சென்றதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களில், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படும் பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ‘சாண்டோ’ என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பின் பிரதான உதவியாளர் என சந்தேகிக்கப்படும் தெலவல வீட்டுத் திட்டத்தைச் சேர்ந்த ‘சஞ்சு’ என்பவரும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘சஞ்சு’ கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மூன்று பெரிய வாள்கள் மற்றும் மிதிவண்டியின் பாகங்களைப் பயன்படுத்தி குற்றக் கும்பல் உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட கூர்மையான ஆயுதம் உள்ளிட்டவை, அவர் வசிக்கும் வீட்டின் பின்புறமுள்ள காட்டுப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
மேலும், இக்குற்றச் செயலுக்காக கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 50,000 ரூபாய் வாடகைக்கு முச்சக்கரவண்டி பெறப்பட்டதுடன், அதற்கு போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்டு கொலைச் சம்பவத்தை மேற்கொள்ள வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த முச்சக்கரவண்டியை ஓட்டி வந்தவர் தெலவல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முச்சக்கரவண்டி மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கல்கிசை குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிலந்த கமகே தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.