செம்மணி புதைகுழியில் மேலும் என்புகள் இருக்கலாம்
யாழ்ப்பாணம் செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில், ஏற்கனவே அகழ்ந்தெடுக்கப்பட்ட என்புக்கூடுகளை ஒத்த புதிய என்புக்கூடுகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (14) தெரிவிக்கப்பட்டது.
நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, சித்துப்பாத்தி புதைகுழி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மண் பகுப்பாய்வு மற்றும் ஸ்கேன் ஆய்வு அறிக்கைகள் சட்ட வைத்திய அதிகாரியால் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த அறிக்கைகளின் அடிப்படையில், புதைகுழியில் மேலும் என்புக்கூடுகள் இருக்கலாம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விசாரணையின்போது, செம்மணி மற்றும் சித்துப்பாத்தி புதைகுழி வழக்குகளை ஒன்றிணைத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதற்கு எழுத்து மூல சமர்ப்பணங்களை தாக்கல் செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேலும், சித்துப்பாத்தி புதைகுழியில் அடுத்தகட்ட அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நீதிமன்றம் அறிவித்துள்ளது.