சுன்னாகத்தில் களவாடப்பட்ட நகைகளுடன் ஊர்காவற்றுறையில் சிக்கிய நபர்
யாழ்ப்பாணம் - சுன்னாகத்தில் களவாடப்பட்ட தங்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன், பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (14) முற்பகல் ஊர்காவற்றுறை நாரந்தனைப் பகுதியில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நவீன கைத்தொலைபேசிகள் தங்க நகைகள்
வீதி கண்காணிப்பு நடவக்கைகளுக்காக கொஸ்தாபசு ஹரிதாஸ் தலைமையிலான ஊர்காவற்றுறை பொலிஸ் அணியினர், நாரந்தனை பகுதியில் ஈடுபட்டிருந்த போது வீதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஒருவர் நடமாடியதை அவதானித்தனர்.
அவரை மறித்து சோதித்த போது அவரது காற்சட்டை பொக்கற்றில் தாலிக்கொடி, சங்கிலி, மோதிரங்கள், பென்ரன்கள், இருந்ததை அவதானித்துள்ளனர்.

இதையடுத்து அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது அவை சுன்னாகம் பகுதியில் களவாடப்பட்ட தங்க நகைகள் என தெரியவந்தது.
இதையடுத்து சந்தேக நபரின் வீட்டுக்கு சென்று சோதனைகளை மேற்கொண்டபோது அங்கு பல நவீன கைத்தொலைபேசிகள், ஒருதொகைப் பணம், இலத்திரனியல் சாதனங்கள் உள்ளிட்ட பல பொருட்களையும் கைப்பற்றியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிசார், சுன்னாகம் பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, குறித்த சந்தேக நபரையும் மீட்கப்பட்ட பொறுமதிமிக்க பொருட்களையும் சுன்னாகம் பொலிசாரிடம் ஊர்காவற்றுறை பொலிசார் கையளித்ததை அடுத்து, சுன்னாகம் பொலிசார் தமது பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசென்றுள்ளனர்.
மேலும் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.