பழைய பொலிஸ் நிலையத்தில் நடந்த திருட்டு ; தொல்பொருள் திணைக்கள ஊழியர்கள் உட்பட நால்வர் கைது
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பகுதியில் அமைந்துள்ள பழைய பொலிஸ் நிலையக் கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த இரும்புப் பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (13) குச்சவெளி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டதுடன், திருட்டுச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பட்டா ரக லொறி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணை
குச்சவெளி பகுதியில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பழைய பொலிஸ் நிலையக் கட்டிடத்திற்குள் சிலர் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, கட்டிடத்தின் கூரை இரும்புகள் மற்றும் ஏனைய இரும்புப் பாகங்களை கழற்றி லொறியில் ஏற்றிக்கொண்டிருந்த நிலையில் நான்கு சந்தேக நபர்களும் கையும் களவுமாக கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பகட்ட விசாரணைகளில், கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தொல்பொருள் திணைக்களத்தில் பணியாற்றி வருபவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
அரச சொத்துக்களைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள திணைக்களத்தைச் சேர்ந்த ஊழியர்கள் இவ்வாறான சம்பவத்தில் தொடர்புபட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பெருமளவிலான இரும்புப் பொருட்கள், அவற்றைக் கழற்றப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட லொறி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.