பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இலங்கை தேசியக்கொடி விவகாரம்; சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கை
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இலங்கை தேசியக்கொடி விவகாரம் சீன தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டிருந்த நிலையில், நாடுகளினது தேசியக் கொடிகளுக்கு முழுமையாக மதிப்பளித்து செயற்பட வேண்டும் என இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
அமேசன் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட கால்துடைப்பான் விளம்பரத்தில், இலங்கையின் தேசியக் கொடி அச்சிடப்பட்டமை குறித்து வெளிவிவகார அமைச்சினால் பெய்ஜிங் நகரில் உள்ள இலங்கை தூதுரகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் குறித்த விளம்பரம் தொடர்பிலான விசாரணைளை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தமது நாட்டு அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தமது உத்தியோப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
எனினும் பல நாடுகளிலும்வேறு நாடுகளுடைய தேசியக்கொடிகளை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இலங்கையின் அமைதி சுபீட்சம் மற்றும் சுயாதீனத்தன்மை ஆகியவற்றுக்கு பல தசாப்தங்களாக தமது நாடு மதிப்பளித்து வருவதாகவும் சீன தூதரகம் டுவிட்டரில் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இலங்கையின் தேசியக் கொடி அச்சிடப்பட்டு அமேசன் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட வர்த்தக விளம்பரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை அமேசன் இணையதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்ததுடன் அதற்கு பலரும் கண்டனங்களையும் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.