ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்பு ; உண்மையை போட்டுடைத்த மெலனியா ட்ரம்ப்
சர்ச்சைக்குரிய பாலியல் குற்றவாளியாக கூறப்படும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தனது தொடர்பு மற்றும், அவரது குற்றங்கள் குறித்த தனக்கு எதுவும் தெரியாது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக எப்ஸ்டீன் விவகாரத்தில் மெலனியாவுக்கும் தொடர்பு இருப்பதாக இணையத்தில் அதிகம் பேசப்பட்டன. இந்த நிலையில், அந்தக் கதைகள் முற்றிலும் பொய்யானவை என்றும், அவை என் மீதான அவதூறுகள் என்றும் மெலனியா ட்ரம்ப் கூறியுள்ளார்.

கேவலமான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் என்னை தொடர்புபடுத்தும் பொய்கள்
கேவலமான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் என்னை தொடர்புபடுத்தும் பொய்கள் இன்றே முடிவுக்கு வர வேண்டும் என கூறிய மெலனியா ட்ரம்ப் , என்னை பற்றி பொய் சொல்பவர்களிடம் அறநெறி, பணிவு மற்றும் மரியாதை ஆகியவை அறவே இல்லை என்றும் சாடினார்.
அவர்களின் அறியாமையை நான் எதிர்க்கவில்லை, மாறாக எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அவர்களின் கீழ்த்தரமான முயற்சிகளை நான் நிராகரிக்கிறேன்,என்றும் மெலனியா ட்ரம்ப் கூறினார்.
வெள்ளை மாளிகையில் அறிக்கையை வாசித்த அவர், எப்ஸ்டீனுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்ததோடு, நானும் எனது வழக்கறிஞர்களும் இந்த ஆதாரமற்ற மற்றும் அடிப்படையற்ற பொய்களை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடியுள்ளோம் என்றும் கூறினார்.
மேலும் ஒவ்வொரு பெண்ணும் விரும்பினால், தனது கதையை பொதுவெளியில் சொல்வதற்கான நாள் அவளுக்குக் கிடைக்க வேண்டும் என்றும் அப்போதுதான், உண்மை நமக்குத் தெரியவரும் எனவும் மெலனியா ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.