உயிரிழந்த மகளின் மரணம் தொடர்பில் தந்தை சந்தேகம் ; சுகாதார அமைச்சிடம் விடுத்துள்ள கோரிக்கை
இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயதுடைய இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள அவரது தந்தை, மரணம் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மருத்துவத் தரப்பினரின் அலட்சியம் காரணமாக தனது மகளின் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள தந்தை, இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரது மகள், கடந்த 3ஆம் திகதி இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர், 13ஆம் இலக்க வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும், குடும்ப உறுப்பினர்கள் பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், மகளின் உடல்நிலை குறித்து ஆலோசகர் மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகள் மற்றும் தாதியர்கள் உரிய கவனம் செலுத்தவில்லை என தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், மகளுக்கு ஏற்பட்ட கடுமையான நெஞ்சுவலி, வாயிலிருந்து இரத்தம் வெளியேறுதல், தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு மற்றும் கடும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுக்கும் உரிய மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நாளன்று மகளின் ஒட்சிசன் அளவு 85 சதவீதமாகக் குறைந்ததாகவும், ஒட்சிசன் சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும், அந்த நிலைமை தொடர்பில் நிபுணத்துவ மருத்துவருக்கு உடனடியாக அறிவிக்கப்படவில்லை எனவும் தந்தை தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அவசர சிகிச்சைக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில், மகளின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து, வார்டிலேயே மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் பின்னரே அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டு உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உடற்கூறாய்வு பரிசோதனைக்கான (Histopathological examination) நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்காலிக மரணத்திற்கான காரணமாக நியூமோனியா குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதித்துறை மருத்துவ அதிகாரி தெரிவித்ததாகவும் தந்தை கூறியுள்ளார்.
இந்த நிலையில், நோயாளியின் மருத்துவப் பதிவுகள், தாதியர் குறிப்புகள், கண்காணிப்பு அட்டவணைகள், மருந்துப் பதிவுகள் மற்றும் பரிசோதனை முடிவுகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்யுமாறும், மருத்துவ நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பதை ஆராயுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்று, ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவத் தரநிலைகள் பேணப்பட்டுள்ளனவா என்பதை தீர்மானிக்க சுயாதீன விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறும் அவர் சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளார்.
தனது மகளின் மரணம் தொடர்பில் உண்மை வெளிக்கொணரப்பட்டு, உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இளம்பெண்ணின் தந்தை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.