நிதி ஆணைக்குழுவில் புதிய முகங்கள் ; தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நியமனம்
நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராக திருமதி நூர் றிசானா அனீஸை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

காலியை பிறப்பிடமாகக் கொண்ட நூர் றிசானா அனீஸ், நிதி அமைச்சில் நீண்டகாலமாக பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.
இலங்கை திட்டமிடல் சேவையைச் சேர்ந்த அவர், 31 ஆண்டுகள் அரச சேவையில் பணியாற்றிய பின்னர் ஓய்வுபெற்றுள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் கே. கருணாகரன் மற்றும் திருமதி ஜே. எம். சி. ஜே. விஜேதுங்க ஆகியோர் நிதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிதி ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்பும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.


