15 ஆண்டுகள் விளக்கமறியலில் இருந்த அரசியல் கைதிக்கு பிணையில் செல்ல அனுமதி
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 15 ஆண்டுகளாக விசாரணையின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு, கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் பிணை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணை நடத்தப்படாமல் இவ்வளவு நீண்ட காலம் ஒருவரை தடுப்புக் காவலில் வைத்திருப்பது, அவருக்கு பிணை வழங்குவதற்கான போதுமான "விசேட சூழ்நிலை" என நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பிணை மனுவை பரிசீலித்த நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்டவர் சுமார் 15 ஆண்டுகளாக சிறையில் இருந்ததையும், கைது செய்யப்பட்டபோது அவருக்கு 26 வயது மட்டுமே இருந்ததையும் சுட்டிக்காட்டியது.

விசாரணையை எதிர்பார்த்து தனது இளமையின் மிக முக்கியமான காலத்தை சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது அவரது அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடைய விடயமாகும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கின் மூன்றாவது குற்றஞ்சாட்டப்பட்டவரான தம்பையா பிரகாஷ் (தனுஷ்) என்பவருக்கு பிணை வழங்க மறுத்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியிருந்த உத்தரவை ரத்து செய்து, நீதியரசர்களான பிரதீப் ஹெட்டியாரச்சி மற்றும் பி. குமாரரத்னம் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
குறித்த நபர் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டதுடன், 2012 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 115 குற்றச்சாட்டுகளும், அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் மேலும் 115 குற்றச்சாட்டுகளும் என மொத்தம் 230 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதுடன், வழக்கில் 106 சாட்சிகளும் பெயரிடப்பட்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் 15B பிரிவு சேர்க்கப்பட்டு, விசேட சூழ்நிலைகளில் பிணை வழங்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும், பிணையை மறுத்த மேல் நீதிமன்றம் அந்தச் சட்டத்திருத்தத்தின் நோக்கத்தை உரிய முறையில் கவனத்தில் கொள்ளவில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்டவரின் மகளுக்கு ஒரு வயது மட்டுமே இருந்ததாகவும், நீண்டகால விளக்கமறியல் காரணமாக அவரது குடும்பத்தினர் பாதுகாப்பும் பராமரிப்பும் இன்றி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 2 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை, தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய நான்கு சரீரப் பிணையாளர்கள், இரு வாரங்களுக்கு ஒருமுறை காவல்துறை தலைமையகத்தின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுதல், வெளிநாட்டுப் பயணக் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தல் உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால் பிணை ரத்து செய்யப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் சட்டத்தரணிகள் அருண் மதுஷங்க மற்றும் அஸ்திக தேவேந்திர ஆகியோர் முன்னிலையானதுடன், சட்டமா அதிபர் சார்பில் பிரதி மன்றாடியார் நாயகம் அனூபா டி சில்வா ஆஜராகினார்.