தமிழக அரசியலில் பரபரப்பு ; பெரும்பான்மைக்காக தவெக தீவிர ஆலோசனை
இந்தியா சென்னை தமிழக அரசியல் களம் தற்போது பரபரப்பான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது.
சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சியமைப்பதற்கான ஆதரவை திரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு பட்டியல் இன்னும் உறுதியாகாத நிலையில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உடனடியாக ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க முடியாது என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, தவெக தலைவர் விஜய் தொடர்ந்து கூட்டணி ஆதரவைப் பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த சூழலில், திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால், தவெக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவியது.
இதனைத் தொடர்ந்து, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சியின் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது அவர், “எதிர்க்கட்சிகள் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து கட்சியிலிருந்து விலகச் சொன்னாலும், தலைவர் விஜயின் மீது நம்பிக்கை வைத்து உறுதியாக இருங்கள். எதற்கும் பதற வேண்டாம்.
நேர்மையாக செயல்பட்டால் நல்லதே நடக்கும்,” என்று அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் விரைவில் தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தவெக சார்பில் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவு கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
இதில் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் தலா 2 எம்.எல்.ஏக்களை கொண்டுள்ள நிலையில், அவர்களின் ஆதரவு கிடைத்தால் தவெக பெரும்பான்மையை எட்டும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதனிடையே, தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இன்று முக்கிய ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுகின்றன. விசிக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு கூட்டங்களும் இன்று நடைபெறுகின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அவசர செயற்குழு மற்றும் மாநிலக் குழு கூட்டங்களை கூட்டியுள்ளது. இதேநேரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு “அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படுங்கள். நீங்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் திமுக மதிப்பளிக்கும்,” என்று அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசியலில் அடுத்த சில மணி நேரங்களில் நடைபெறும் அரசியல் நகர்வுகள், மாநிலத்தின் அடுத்த கட்ட ஆட்சியமைப்பை தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.