அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை ; சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய காவலாளி
இந்தியாவில் குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் கட்டிடக் காவலாளி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த பெண் ஒருவர் நேற்று இரவு கட்டிடத்தின் மாடியில் நடைபயிற்சியில் ஈடுபடுவதற்காகச் சென்றுள்ளார்.
இதன்போது, அவரை பின்தொடர்ந்து சென்றதாகக் கூறப்படும் கட்டிடக் காவலாளியான தரம் சிங், அப்பெண்ணை பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றதுடன், தனது கைபேசியை அணைத்துவிட்டு தலைமறைவாகியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களின் (CCTV) பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்துள்ளனர்.
விசாரணைகளின் அடிப்படையில், ஹெபத்பூர் பகுதியில் பதுங்கியிருந்த தரம் சிங்கை இன்று காலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தரம் சிங் குறித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் காவலாளியாக பணியில் இணைந்து நான்கு நாட்களே ஆகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவரை காவலாளியாக பணியில் அமர்த்திய தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் நிர்வாகத்தினரிடமும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தரம் சிங்கின் பின்னணி, பணியில் இணைக்கப்பட்ட விதம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.