உயர்தரப் பரீட்சை ஆரம்பம்; விசேட போக்குவரத்து சேவைகள்!
2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இம்முறை பரீட்சைக்காக 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்கலாக மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட போக்குவரத்து சேவைகள்
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளின் வசதிக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்காக சுமார் 1,700 'சிசு செரிய' பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரை பாடசாலை பேருந்து சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. பரீட்சைக் காலத்தில் பாடசாலை பேருந்து சேவைகளை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக இயக்குவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், பரீட்சைக் காலம் முழுவதும் எவ்வித ரத்துகளுமின்றி வழக்கமான கால அட்டவணையின்படி தொடருந்துகள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், சனிக்கிழமைகளில் திட்டமிடப்பட்டிருந்த தொடருந்து பாதை பராமரிப்புப் பணிகள் பரீட்சைக் காலத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.