வடக்கில் பாரிய பின்னடைவை சந்தித்த தமிழரசு கட்சி ; சிறிநேசன் ஆதங்கம்
வடபகுதியில் இம்முறை தமிழரசு கட்சி பாரிய பின்னடைவை சந்தித்து இருக்கின்றது, வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட குறைபாடுகள் அதற்கு காரணம் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு குருமண்வெளியில் நேற்று(24)நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
“கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலே கூட்டமைப்பாக இணைந்து போட்டியிட்டாலும்கூட பிரதேச சபைகளை முற்றாக கைப்பற்றக்கூடிய அறுதிப் பெரும்பான்மை எமக்குக் கிடைத்திருக்கவில்லை.
இதன் காரணமாக தென்னிலங்கை சார்ந்த கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மற்றும் எமது கட்சியுடன் உடன்படாத சில கட்சிகளோடு இணைய வேண்டிய நிற்ப்பந்தங்கள் ஏற்பட்டிருந்தன.
அதன் காரணமாக உள்ளுராட்சி சபை தேர்தலில் இப்போது நாங்கள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடுவதைவிட பிரிந்து போட்டியிட்டு அதிகமான ஆசனங்களை கைப்பற்றிய பின்னர் தமிழ்த் தேசிய உணர்வுகள் உள்ள கட்சிகள் ஒன்றாக இணைகின்ற போது நாங்கள் தென்னிலங்கை கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டிய தேவை ஏற்படாது.
எனவே கடந்த காலத்தில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடத்தின் அடிப்படையில், தமிழ் தேசியக் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டு ஆசனங்களை கைப்பற்றி பின்னர் ஒன்றாக இணைவதற்கு அவர்கள் முற்பட வேண்டும்.
இணைந்து போட்டியிடுவதன் மூலமாக சில வேளைகளில் உள்ளுராட்சி மன்றத்தில் வரக்கூடிய ஆசனங்களைவிட குறைவான ஆசனங்களை பெறக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன எமது கட்சி பாரம்பரியமான கட்சி என்ற அடிப்படையில் கருத்து சுதந்திரம் இருக்கின்றது.
கடந்த காலத்தில் நாங்கள் எடுத்த முடிவுகள் சிலவற்றில் உடன்பாடுகள் இல்லாது முடிவுகள் காணப்படுகின்ற படியால் பொது வேட்பாளர் பற்றிய விடயத்திலும் உடன்பாடு இருக்கவில்லை. குறிப்பாக வடபகுதியில் இம்முறை தமிழரசு கட்சி பாரிய பின்னடைவை சந்தித்து இருக்கின்றது.
அதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தால் அந்த இடத்தில் வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக எமது சில முக்கியமான நபர்கள் அதிருப்தியின் காரணமாக கட்சியை விட்டு வெளியேறக் கூடிய நிலைமை காணப்பட்டது.
அவ்வாறானவர்கள் தனித்துப் போட்டியிடக்கூடிய நிலைமை காணப்பட்டது. இதன் காரணமாக வாக்கு சிதறல்கள், சிதைவுகள் ஏற்பட்டு வடபகுதியில் எங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டு இருக்கின்றது. இப்படியான விடயங்கள் காரணமாகத்தான் மத்திய குழு கூட்டத்தின் போதும் வாத, பிரதிவாதங்கள் ஏற்படுகின்றன” என்றார்.