இரத்து செய்யப்பட்ட விமான சேவைகள் ; வெளிநாட்டுப் பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்
மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பயணிகளின் நலன் கருதி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விசேட தீர்மானமொன்றை எடுத்துள்ளது.
விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதன் காரணமாக, தங்களது விசா காலம் முடிவடைவதற்குள் இலங்கையிலிருந்து வெளியேற முடியாத பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அனுமதி
இதனைக் கருத்திற்கொண்டு, குறித்த பயணிகள் சட்டரீதியாக இலங்கையில் தங்கியிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் 7 நாட்களுக்கு இலவச விசா நீடிப்பு வழங்கப்படவுள்ளது.
பயணிகள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகக் கருதப்படுவதைத் தவிர்க்கவும், அவர்கள் தங்களது மாற்றுப் பயண ஏற்பாடுகளைச் செய்யும் வரை எவ்வித அசௌகரியமுமின்றி தங்கியிருக்கவும் இந்த அனுமதி வழங்கப்படுகிறது.
இந்தத் தீர்மானத்தை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.