சுரேஷ் சலே விவகாரம் ; ஜனாதிபதி மீது SLPP கடும் குற்றச்சாட்டு
ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீறி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளரும் சட்டத்தரணியுமானமனோஜ் கமகே இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இலங்கை, ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள போதிலும், முன்னாள் புலனாய்வு அதிகாரி சுரேஷ் சலே நீதிமன்ற உத்தரவின்றி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலே மீது மனிதாபிமானமற்ற நடத்தைகள் மற்றும் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அதன் காரணமாக அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனோஜ் கமகே தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மௌனம் காப்பது, சர்வதேச உடன்படிக்கைகளை மீறும் செயலாகவே கருதப்பட வேண்டும் என அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், எதிர்காலத்தில் இந்த சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போது, ஜனாதிபதி முதல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ்நிலை அதிகாரிகள் வரை அனைவரும் சட்டத்தின் முன் பதிலளிக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.
மேலிட உத்தரவுகளை கண்மூடித்தனமாக நிறைவேற்ற வேண்டாம் என அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்த அவர், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்தார்.
சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும் ஒருநாள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய சூழல் உருவாகும் எனவும் மனோஜ் கமகே குறிப்பிட்டார்.