யாழில் வெளிநாட்டவர்களை குறிவைத்து மோசடி ; பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தேசங்களில் இருந்து வருபவர்களையும், ஏனையோரையும் குறிவைத்து பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி பறித்த கும்பல் ஒன்று சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்டவர்கள் கணவன், மனைவி மற்றும் மச்சான் ஆகியோர் அடங்கிய மூவர் குழுவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின்படி, வெளிநாட்டில் இருந்து வரும் ஆண்களை ஆசை வார்த்தை கூறி குறித்த பெண் ஒருவர் தனியிடத்திற்கு அழைத்துச் செல்வதாகவும், பின்னர் அங்கு கணவன் மற்றும் அவரது மச்சான் சென்று சம்பவத்தை வீடியோ பதிவு செய்து மிரட்டல் விடுத்து பணம் மற்றும் நகைகளை பறித்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதேபோன்ற பாணியில் அண்மையில் இடம்பெற்ற மற்றொரு சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தக் குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்ணுக்கு எதிராக ஏற்கனவே பல முறைப்பாடுகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.