கோட்டாபயவை பிரதமராக்க முயற்சிக்கும் பலமிக்க நாடு-ராஜதந்திர ரீதியிலும் நகர்வுகள்
மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் நாட்டில் இருந்து தப்பிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை பெற்றுக்கொடுப்பதற்காக பலமிக்க வெளிநாடொன்று சூட்சுமான ராஜதந்திர ரீதியிலான நகர்வுகளை ஆரம்பித்துள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகர்வுகளை தீவிரப்படுத்தியுள்ள அந்த நாட்டின் தூதுவர்
கோட்டாபய ராஜபக்ச தலைமையின் கீழ் நாடு அடைந்த வங்குரோத்து நிலைமையை பிரயோசனப்படுத்தி, இந்த நகர்வுகளை தீவிரப்படுத்த குறித்த நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருவதாக கூறப்படுகிறது.
இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கக்கூடிய மட்டத்தில் உள்ள அரச உயர் அதிகாரிகள் சிலரை சந்தித்து இந்த தூதுவர், கோட்டாபய ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டால், சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின்றி இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண உதவ முடியும் எனக்கூறியுள்ளதாக பேசப்படுகிறது.
இலங்கைக்கு பெருந்தொகை கடனை வழங்கியுள்ள இந்த நாடு, சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ள 2.9 பிலிலியன் டொலர் கடனுதவியை பெறுவதற்கான அடிப்படை தகுதியான கடன் மறுசீரமைப்புக்கான தனது இணக்கத்தை இதுவரை வழங்காத நாடு.
கடன் மறுசீரமைப்புக்கு பதிலாக இந்த நாடு மாற்று யோசனைகளை மறைமுகமாக முன்வைத்து வருகிறது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீர்வுகாண நிதியுதவி வழங்கவும் முயற்சி
சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை பெறவேண்டிய அவசியமில்லை எனவும் நாட்டின் பொருளாதார நெருக்கடியை சரி செய்ய தமது நாடு நிதியுதவியை வழங்க முடியும் எனவும் சம்பந்தப்பட்ட நாட்டின் தூதுவர், அரச அதிகாரிகளுடனான சந்திப்பில் கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை பெற்றுக்கொடுக்க தமது நாடு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நாட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள் அண்மையில் கடும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு அதிகளவான கடனுதவிகளை சீனா, இந்தியா உட்படசில நாடுகளே வழங்கியுள்ளன. ஏனைய நாடுகள் இலங்கையின் கடனை மறுசீரமைக்க இணங்கியுள்ள போதிலும் சீனா மாத்திரம் கடன் மறுசீரமைப்புக்கு இணங்காது இழுத்தடிப்பு செய்து வருகின்றது என தகவல்கள் கூறுகின்றன.