உலக சந்தை விலை மத்தியில் இலங்கை எண்ணெய் கொள்முதல் குறித்து விவாதம்
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சாதாரண மட்டத்தில் இருந்தபோதிலும், இலங்கையைச் சேர்ந்த கொள்வனவாளர் ஒருவர் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்கு 286 அமெரிக்க டொலர்கள் என்ற மிக அதிக விலையைச் செலுத்தியுள்ளதாக HSBC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) ஜோர்ஜ் எல்ஹெடரி (Georges Elhedery) தெரிவித்துள்ளார்.
ஹொங்கொங்கில் நடைபெற்ற முதலீட்டு மாநாடொன்றில் அவர் வெளியிட்ட இந்தக் கருத்து தொடர்பாக லண்டனில் உள்ள HSBC தலைமையகத்தின் ஊடகப் பிரிவில் ஜோர்ஜ் எல்ஹெடரி அவ்வாறு கூறியதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
"உண்மையில் நீங்கள் மத்திய கிழக்கிலிருந்து எண்ணெயைப் பெற முயற்சித்தால், நீங்கள் 140 முதல் 150 டொலர்கள் வரை செலுத்த வேண்டியிருக்கும்.

செங்கடல் வழியாக எண்ணெயைப் பெற முயன்றால், கப்பல் போக்குவரத்துக்காக மேலதிகமாக 30 முதல் 40 டொலர்கள் வரை செலுத்த வேண்டியிருக்கும்.
இந்நிலையில், மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்காக நான் கேள்விப்பட்ட அதிகபட்ச விலையான 286 டொலர்கள் இலங்கையிலிருந்து பதிவாகியுள்ளது."
என ஜோர்ஜ் எல்ஹெடரி கூறியிருந்தார். எவ்வாறாயினும், இந்தக் கருத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முற்றாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக அதன் தலைவர் அறிக்கையொன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.
ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்கு 286 டொலர் செலுத்த கூட்டுத்தாபனம் உடன்பட்டுள்ளதாகப் பரவும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. அவ்வாறான எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை எனவு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலுக்கு மத்தியிலும், உலக சந்தை விலையுடன் ஒப்பிடுகையில் மிகவும் சாதகமான விலையிலேயே மசகு எண்ணெயை கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்துள்ளது.
அதன்படி, இனிவரும் காலங்களில் நாட்டுக்கு வரவுள்ள மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை அண்ணளவாக 71.99, 111.62, 71.81 மற்றும் 113.29 டொலர்கள் என்ற அளவிலேயே காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.