வெளிநாட்டில் இருந்து தாயகத்திற்கு வந்த பெண் விமான நிலையத்தில் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் , சட்டவிரோதமாக சிகரெட் தொகையை கொண்டுவர முயன்றதாகக் கூறப்படும் 45 வயதுடைய பெண்ணொருவர் இன்று (14) சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவூதி அரேபியாவில் இரண்டு ஆண்டுகள் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய பின்னர் இலங்கை திரும்பிய கண்டியைச் சேர்ந்த குறித்த பெண், காலை 6.15 மணியளவில் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

குறித்த பெண் வெளியேற முற்பட்டபோது சுங்க அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது நான்கு பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 35,200 சிகரெட்டுகள் அடங்கிய 176 அட்டைப் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி சுமார் ரூ.5.28 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. சுங்க விசாரணைகளைத் தொடர்ந்து சிகரெட் தொகை பறிமுதல் செய்யப்பட்டதுடன், குறித்த பெண்ணுக்கு ரூ.100,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.