கோர தாண்டவம் ஆடும் தித்வா புயல் ; வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து
இலங்கைக்குத் தென்கிழக்காக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து மட்டக்களப்புக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 210 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருக்கின்றது.
அது வடக்கு - வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று நிலைமை
இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் பலத்த மழை நிலைமையும் கடும் காற்று நிலைமையும் அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பல பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் 200 மி.மீ இற்கும் அதிகமான மிக பலத்த மழையும், திருகோணமலை, பதுளை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீ இற்கும் அதிகமான மிக பலத்த மழையும் பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் மணிக்கு 60-70 கி.மீ வேகத்தில் மிகவும் பலத்த காற்றும், இடைக்கிடையே மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் மிக பலத்த காற்றும் வீசக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.