இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் டொலராக அதிகரிப்பு
இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இது 6.03 சதவீத வளர்ச்சியாகும்.
கடந்த 2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் 14.41 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியிருந்தது.

இவ்வாண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 5.72 சதவீதத்தால் அதிகரித்து 12.01 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
இதேவேளை, சேவைகள் ஏற்றுமதி வருமானமும் 7.20 சதவீதத்தால் அதிகரித்து 3.27 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1.62 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
இது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 11.57 சதவீத வளர்ச்சியாகும்.
அத்துடன், ஒக்டோபர் மாதத்தில் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 9.65 சதவீதத்தால் அதிகரித்து 1.26 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.
சேவைகள் ஏற்றுமதி வருமானம் 18.87 சதவீதத்தால் அதிகரித்து 360.21 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாகவும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மேலும் தெரிவித்துள்ளது.