வெளிநாடுகளில் தவறான நடத்தையில் ஈடுபடும் இலங்கையருக்கு உள்நாட்டிலும் சட்டம் நடைமுறைப்படுத்த திட்டம்
வெளிநாடுகளில் தவறான நடத்தை குற்றங்களுக்காகத் தண்டனை விதிக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படும் நபர்கள் தொடர்பாக நாட்டிற்குள் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் அவசியம் குறித்து நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் மன்றத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, வெளிநாட்டு நீதிமன்றங்களால் வழங்கப்படும் அத்தகைய தீர்ப்புகளை இலங்கையில் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குற்றங்களுக்காகத் தண்டனை
நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் மன்றம் மற்றும் அம்மன்த்தினால் நியமிக்கப்பட்ட உப குழுவின் கூட்டுக் கூட்டம் கடந்த 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
மன்றத்தின் தலைவியான மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் மற்றும் உப குழுவின் இணைத் தலைவியான நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க ஆகியோரின் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.
வெளிநாடுகளில் தவறான நடத்தை குற்றங்களுக்காகத் தண்டனை விதிக்கப்பட்டு நாடு கடத்தப்படும் நபர்களின் பூர்வீகக் குற்றப் பதிவுகள் குறித்து உள்நாட்டிலுள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்தப்படாததால், அவர்கள் சாதாரண நபர்களாக சமூகத்துடன் கலக்க நேரிடுவதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம் ; தகாத உறவால் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு தந்தை செய்த மோசமான சம்பவம்
இதன் மூலம் அத்தகைய நபர்கள் மீண்டும் தவறான நடத்தை குற்றங்களில் ஈடுபடும் ஆபத்து நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், வெளிநாடுகளில் தவறான நடத்தை குற்றங்களுக்காகத் தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக சர்வதேச ஒருங்கிணைப்பு பொறிமுறையொன்றைத் தயாரிப்பது மற்றும் அந்தத் தகவல்களைக் பொலிஸ் குற்றப் பதிவு முறைமையில் உள்ளடக்குவதற்குத் தேவையான சட்டரீதியான மற்றும் தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், சிறுவர்களுடன் இணைந்து செயற்படும் நிறுவனங்களில் பணியமர்த்தல்களின் போது கட்டாயப் பின்னணிப் பரிசோதனையை மேற்கொள்வது மற்றும் மீண்டும் குற்றங்கள் நிகழ்வதைத் தடுப்பதற்காக ஆபத்தின் அடிப்படையிலான சட்டபூர்வ கண்காணிப்பு முறைமையொன்றைத் தயாரிப்பதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், 2005ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க வீட்டு வன்முறைத் தடுப்புச் சட்டம் மற்றும் 1999ஆம் ஆண்டின் 37ஆம் இலக்க பராமரிப்புச் சட்டம் உள்ளிட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குரிய சட்டங்களை விரைந்து திருத்துவதன் அவசியமும் வலியுத்தப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான நீதித்துறை நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமாவதால் நீதிமன்றத் தீர்ப்புகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைப்பதற்கு முறையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.