ஈரான் மீதான தாக்குதல் ; அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கண்டனம்
ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததாக கூறப்படும் செய்திக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய இராணுவத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
அயதுல்லா அலி கமேனி மற்றும் ஈரானின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் செயலானது, சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறும் ஒரு செயலாகும்.
இது ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு எனச் சுட்டிக்காட்டிய அவர், இதற்காக ஈரான் நாட்டு மக்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஈரான் - இஸ்ரேல் மோதல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையை ஹக்கீம் விமர்சித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால இருதரப்பு உறவுகள் இருந்தபோதிலும், அரசாங்கத்தின் அறிக்கையில் ஈரானின் பெயர் குறிப்பிடப்படவில்லை அல்லது அந்த நாடு சந்தித்த இழப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பைக் கண்டிக்காமல், பதற்றத்தைத் தணிக்கும் பொறுப்பை ஈரான் மீது மட்டும் சுமத்துவது போல் அரசாங்கத்தின் கருத்துக்கள் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் இலங்கை தனது 'அணிசேரா கொள்கை' மற்றும் 'நடுநிலைத் தன்மையில்' இருந்து விலகிச் செல்வதாகவும் அவர் சாடியுள்ளார்.
அத்துடன் ஈரானின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய ஹக்கீம், இந்த மோதல் தொடர்ந்தால் அது உலகளாவிய ரீதியில் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒரு நீண்டகாலப் போராக மாறும் என எச்சரித்துள்ளார்.
மேலும், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்தான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுடன் தனது ஒற்றுமையை வெளிப்படுத்திய அவர், அனைத்து தரப்பினரும் இராஜதந்திர ரீதியாகவும் நிதானமாகவும் செயற்பட வேண்டும் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.