நாடளாவிய நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்
நாடளாவிய ரீதியில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார்.
நேற்று பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட தேவையற்ற பதற்றம் மற்றும் அளவுக்கு அதிகமான எரிபொருள் சேமிப்பு காரணமாகவே இன்று காலை சில நிலையங்களில் தற்காலிகமாகக் கையிருப்பு தீர்ந்திருந்த போதிலும், இன்று அதிகாலை முதல் விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை 6 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட விநியோகப் பணிகள் ஊடாக, சாதாரண ஒரு நாளை விட 1.5 மடங்கு அதிக எரிபொருள் சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் 842,810 லீட்டர் ஒட்டோ டீசல், 95,700 லீட்டர் 92 ரக பெட்ரோல், 5,97,000 லீட்டர் 95 ரக பெட்ரோல் மற்றும் 184,800 லீட்டர் சுப்பர் டீசல் ஆகியவை நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, கொழும்பின் முக்கிய பகுதிகளில் எரிபொருள் வரிசைகள் எதுவும் இல்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளதுடன், விநியோக வாகனங்களின் போக்குவரத்து காரணமாக சில இடங்களில் சிறிய தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதே தவிர, தட்டுப்பாடு ஏற்பட வேறு எவ்வித காரணமும் இல்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் தேவையற்ற பதற்றமடையாமல் தங்களுக்குத் தேவையான அளவு எரிபொருளை மட்டும் வழக்கம் போல் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் இவ்வாறு இயல்பாகச் செயற்படும் பட்சத்தில், நாளை காலைக்குள் எரிபொருள் விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்பும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் உறுதியளித்துள்ளார்.